தொடர் மழையினால் கிளிநொச்சி – இரணைமடுக் குளத்தின் நீர் மட்டம் அதிகரித்துவருகிறது. இதனால் இரணைமடுக் குளத்தின் நான்கு வான் கதவுகள் சிறிய அளவில் திறக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி நீர்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் ராஜகோபால், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் ஆகியோரால் இன்று காலை திறந்து விடப்பட்டுள்ளது.
இரணைமடு குளத்தின் நீரேந்தும் பகுதியில் பெய்த பலத்த மழை மற்றும், கனகராயன் ஆற்றினூடாக வரும் நீர் காரணமாக நீர் மட்டம் வெகுவாக அதிகரித்து வருகின்றது.
தொடர்ச்சியான சீரற்ற காலநிலை காரணமாக வெள்ள அனர்த்தம் ஏற்படா வகையில் வான் கதவுகளை கண்காணிப்பின் அடிப்படையில் படிப்படியாக திறக்க ஏற்கனவே நீர்பாசன திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இந்த நிலையில் இன்று காலை நான்கு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
நீரின் வருகை அளவைப் பொறுத்து நீர் வெளியேற்றப்படும் அளவு அதிகரிக்கப்படலாம் என்றும் தாழ்நிலப் பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படவேண்டும் என்றும் நீர்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.
பன்னங்கண்டி, கண்டாவளை, முரசுமோட்டை, ஊரியான் உள்ளிட்ட தாழ்நில பகுதியில் உள்ள மக்கள் அவதானமாக செயற்படுமாறும், வாழ்வாதாரங்கள், கால்நடைகளை பாதுகாக்கும் வகையிலும், வெள்ள அனர்த்தத்திலிருந்து பாதுகாப்பாக இருக்க முன்னெச்சரிக்கையுடன் செயற்படுமாறும் நீர்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.
வான்பாய்வதை பார்த்தல் மற்றும் தாழ்நில பகுதிகளிற்கு பாதுகாப்பின்றி செல்வதை தவிர்க்குமாறும், மீன்பிடித்தல், நீந்துதல் போன்ற செயற்பாடுகளை தவிர்க்குமாறும் இடர் முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
குறிப்பாக சிறுவர்கள், முதியவர்கள், நோயாளர்கள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.