கோவிட் தடுப்பூசி ஏற்றத் தாழ்வின் பிரதிபலிப்பே ஒமிகோர்ன் திரிபு ஏற்படுவதற்கான காரணம் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதானம் கேப்ரெயேசூஸ் இந்த விடயத்தை தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதில் நீண்ட நாட்களாக நீடித்து வரும் தடுப்பூசி குறித்த உலக அளவிலான ஏற்றத்தாழ்வு நிலைமையை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தடுப்பூசி சமத்துவத்தை நிலைநாட்டுவதற்கு காலம் தாழ்த்தும் வரையில் கோவிட் வைரஸ் பரவுகையும் புதிய திரிபு உருவாக்கமும் அதிகரிக்கும் ஆபத்து காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவருடைய டுவிட்டர் பதிவில் மேலும்,
உலகில் கோவிட் தடுப்பூசி ஏற்றுகை தொடர்பில் நாடுகளுக்கு மத்தியில் ஏற்றத்தாழ்வு நிலை காணப்படுகிறது.
சில வறிய நாடுகளுக்கு தடுப்பூசி கிடைப்பதில் சிக்கல் காணப்படும் அதேநேரம் சில செல்வந்த நாடுகள் மித மிஞ்சிய அளவில் தடுப்பூசியை களஞ்சியப்படுத்திக் கொண்டுள்ளதாக பரவலாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஒமிகோர்ன் திரிபு தொடர்பில் உலகம் முழுவதிலும் உள்ள விஞ்ஞானிகளுடன் இணைந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
திரிபின் தன்மை குறித்து கண்டறியும் நோக்கில் இவ்வாறு ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
ஒமிகோர்ன் வைரஸின் பரவுகை, அதன் வீரியம், நோய் அறிகுறிகள், அதன் தாக்கம், தடுப்பூசிக்கான எதிர்வினை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.