யாழ்.காரைநகரில் உள்ள பாடசாலை ஒன்றில் அதிபர் தாக்கியதில் க.பொ.த சாதாரண தர மாணவனின் ஒருபக்க காதில் செவிப்பறை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, காரைநகர் – இந்துக்கல்லுாரியில் க.பொ.த சாதாரண தரத்தில் கல்வி பயிலும் மாணவன் ஒருவனை அழைத்த அதிபர் காட்சட்டை பொக்கற்றுக்குள் கை வைக்குமாறு கூறிவிட்டு 7 தடவை காதை பொத்தி அறைந்ததாக கூறப்படுகின்றது.
இச் சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிலையில் காதில் வலி அதிகரித்ததால் மாணவன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பாக வைத்தியசாலை பொலிஸாரிடம் பெற்றோர் முறைப்பாடும் வழங்கியிருக்கின்றனர். மேலும் மாணவின் காதை பரிசோதனை செய்த வைத்தியர்கள் செவிப்பறை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.
இந்நிலையில் ஊர்காவற்றுறை பொலிஸார் சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், வடமாகாண கல்வி அமைச்சின் ஊடாகவும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும், அதிபர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அறிய முடிகின்றது.