கிறிஸ்துமஸ் விருந்துகளுக்குச் செல்வதற்கு முன் கோவிட் தொற்று தொடர்பான பக்கவாட்டு ஓட்ட சோதனையை மேற்கொள்ளுமாறு சுகாதார செயலாளர் சஜித் ஜாவிட் நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஒமிக்ரோன் மாறுபாட்டின் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட முகக்கவசம் அணிவதில் புதிய கடுமையான நடவடிக்கைகளுடன், பண்டிகைக் காலங்களில் “விவேகமாக” இருக்குமாறு பொதுமக்களை அவர் வலியுறுத்தினார்.
பிபிசி வானொலியில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார். இந்த கட்டத்தில் மக்கள் கிறிஸ்துமஸ் திட்டங்களை மாற்றக்கூடாது எனவும், ஆனால் ஒரு பெரிய கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு முன் பக்கவாட்டு ஓட்ட சோதனை (LFT) மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
“கிறிஸ்மஸ் விருந்துக்கு நீங்கள் அழைக்கப்பட்டால், அங்கு வெகு சிலரே இருப்பார்கள், நீங்கள் செல்வதற்கு முன் பக்கவாட்டு ஓட்ட சோதனை செய்துகொள்ளவது விரும்பத்தக்கது. ஆனால் கவனமாக இருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, ஹீத்ரோ விமான நிலையம் அதன் நான்காவது முனையத்தை மீளவும் திறந்துள்ளது.
இங்கிலாந்தின் கொரோனா வைரஸ் தொடர்பான சிவப்பு பட்டியலில் உள்ள நாடுகளில் இருந்து வருகையை செயலாக்குவதற்கான பிரத்யேக வசதியாக நான்காவது முனையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையானது அதிக ஆபத்துள்ள பட்டியலில் உள்ள இடங்களிலிருந்து வரும் பயணிகளை மற்ற பயணிகளிடமிருந்து விலக்கி வைக்கும் என்று விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோவிட் தொற்றின் ஒமிக்ரோன் மாறுபாடு குறித்த கவலைகள் காரணமாக கடந்த 26ம் திகதி முதல் தென்னாப்பிரிக்காவில் உள்ள 10 நாடுகள் சிவப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.