இந்தியா- கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து இராணுவ ஹெலிகொப்டர் ஒன்று இன்று பிற்பகலில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் மையத்துக்கு புறப்பட்டு சென்றபோது விபத்துக்குள்ளானது.
ஹெலிகாப்டர் குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதை மேலே பறந்து கொண்டு இருந்த போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்ததால் இராணுவ ஹெலிகொப்டர் மலைப்பகுதியில் வீழ்ந்து நொறுங்கியது.
ஹெலிகொப்டர் தீப்பிடித்து எரிந்து கீழே வீழ்ந்தது.
ஹெலிகாப்டரில் இராணுவ உயர் அதிகாரிகள், வீரர்கள் உட்பட 14 பேர் பயணம் செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் மீட்புப்படையினர் உடனடியாக அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர்.
ஹெலிகொப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி, மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர்.
மேகமூட்டம் காரணமாக இந்த விபத்து நடந்ததாக தெரிய வந்துள்ளது.