
புகையிரதத்துடன் விபத்து சம்பவத்தில் எக்காலத்தொணி திருச்சபை ஊழியர் பலியாகியுள்ளார். குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி அக்கராயன் பிரதான வீதியிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் முழங்காவில் பகுதியை சேர்ந்த பி.பத்மசீலன் என்ற 50 வயதுடைய 02 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
முறிகண்டியிலிருந்து மோட்டார் சைக்கிளில் வீடுநோக்கி பயிணத்த குறித்த நபர், தரித்திருந்த ரிப்பர் வாகனத்தை கடந்து புகையிரத கடவையை கடக்க முற்பட்டுள்ளார். இதன்போது புகையிரதம் அவர் மீது மோதியுள்ளது.
படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட புகையிரத திணைக்கள பொலிசார் மோட்டார் சைக்கிளை பாதுகாப்பாக அருகில் உள்ள வீட்டில் விட்டு சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பான விசாரணைகளை மாங்குளம் பொலிசார் முன்னெடுத்த வருகின்றனர்.
இதேவேளை, குறித்த வீதி பெருமளவு மக்கள் நடமாடும் வீதி என்பதாலும், பாடசாலை மிக அருகில் உள்ளமையாலும் பாதுகாப்பான புகையிரத கடவை ஒன்றை அமைத்து தருமாறு மக்கள் பல தடவை கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது போன்று பல விபத்துக்கள் இடம்பெற்றுள்ள நிலையில், நேற்று இடம்பெற்ற விபத்து இறுதியான விபத்தாக அமையும் வகையில் பாதுகாப்பு கடவை ஒன்றைஅமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.