அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு என்ற போர்வையில் சர்வதேச நீதியைப் புறக்கணிக்க சுமந்திரன் தயாராகுவதாக வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அமைப்பு பணிப்பாளர் திருமதி கருணாவதி பத்மநாதன் தெரிவித்துள்ளார்.
அவர் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளாக ஈழத்தமிழர் உறவுகள் எதிர்பார்த்து நிற்பது சர்வதேச நீதியே. உள்ளகப் பொறிமுறையும் அல்ல, கலப்புப் பொறிமுறையும் அல்ல. வலிந்து காணாமலாக்கப்பட்டமை இலங்கைத் தீவில் இன அழிப்பின் ஓர் அங்கமாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளது
இதைச் சர்வதேசப் பொறிமுறை ஊடாக விசாரிக்குமாறு கோரவேண்டிய தமிழ் அரசியற்தரப்புகள் என்ன செய்துகொண்டிருக்கின்றன?
இதுவரை சர்வதேச நீதிக்கான வாய்ப்பு உருவாகியபோதெல்லாம், அதை நீர்த்துப்போகச் செய்யும் கைங்கரியத்தில் ஈடுபட்டவரான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான எம். ஏ. சுமந்திரன் மீண்டும் அமெரிக்கா மற்றும் இந்தியாவுடன் இணைந்து இலங்கை அரசுமீது மேற்குலகம் இந்தியாவின் ஆதரவுடன் கொண்டு வரவுள்ள அடுத்த தீர்மானத்தை இலங்கை அரசு சாதிப்பதற்காகத் தனது இராஜதந்திர நகர்வுகளைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளார்.
அதேவேளை, பதின்மூன்றாம் சட்டத்திருத்தத்தை முழுமையாக நடைமுறைப் படுத்த இந்தியா உதவவேண்டும் என்று விண்ணப்பிக்க ரெலோவின் வழிகாட்டலில் புளொட், ஈ.பீ.ஆர்.எல்.எவ் மற்றும் நீதியரசரர் க. வி. விக்னேஸ்வரன் தலைமையிலான கட்சிகள் ஆரம்பித்துள்ளன.
அதாவது ஓர் அணி பதின்மூன்றை ஆரம்பப் புள்ளியாக வைத்துக்கொண்டு அதற்கு மேலே பையப்பையச் சென்று ஏதோ சமஸ்டியை எட்டிப்பிடித்துவிடலாம் என்ற ஒரு தவறான திசையை அர்த்தமுள்ள அதிகாரப் பரவலாக்கம் என்று சொல்கிறது. மற்றைய அணி பதின்மூன்றை 1987 இல் இருந்தவாறே அப்படியே தந்தால் போதும் என்று ஏற்னவே தவறாகிப் பாதகமாகிவிட்ட திசையைக் காட்டித் தமிழ்த் தேசியத்தைக் கெடுக்க முயல்கிறது.
பதின்மூன்று என்ற ஒரு பலனற்ற கம்பத்தைப் பிடித்துக்கொண்டு இடப்புறமாக ஓர் அணி சுற்றுவது போலவும் மறு அணி பதின்மூன்று பிளஸ் என்று வலப்பக்கமாகச் சுற்றுவதும் போலவும் அர்த்த மற்ற ஆரம்பப் புள்ளியிலேயே தமிழத்;தேசியக் கூட்டமைப்பின் இரண்டு அணிகளும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியும் தமிழ் மக்களைக் குழப்பி முடக்கியுள்ளன. முரண்பட்டுக்கொண்டிருக்கும் இந்தச் சூழலில், பாதிக் கப்பட்ட தரப்புகளில் ஒன்றான நாம் பொறுப்புக்கூறல் பற்றிய நகர்வுகளை இவர்களின் இந்த நடவடிக்கைகள் பற்றிய எமது கருத்தைத் தெரிவிக்கவேண்டிய நிலையில் உள்ளோம்.
அதிகாரப் பரவலாக்கத்தை அர்த்தமுள்ளவகையில் செயற்படுத்தும் ஒரு வழிமுறையை இலங்கை அரசியலின் ஒற்றையாட்சி ஒருபோதும் வழங்கப்போவதில்லை. சமஸ்டி என்று கதைப்பவர்கள் ஏன் அதிகாரப்பரவலாக்கம் என்ற சொற்பிரயோகத்தைக் கையாளவேண்டும் என்பதே எமது கேள்வி.
பதின்மூன்றும் சரி, அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை ஒற்றையாட்சி அரசியலமைப்புக்குள் எங்கிருந்து ஆரம்பிப்பதும் சரி, உள்ளகப் பொறி முறைகளே.
ஈழத்தமிழர்களுக்கும் தமிழ்பேசும் மக்களுக்கும் வடக்கும் கிழக்கும் இணைந்த பாரம்பரியத் தாயகம் என்பதை தமிழர் தரப்பு இந்தியாவைப் பகிரங்கமாக அங்கீகரிக்குமாறு கோரவேண்டும்.
அதைப் போலவே, ஒற்றையாட்சி அரசியலமைப்புக்குள் வடக்குகிழக்கு உள்ளடக்கப்படல் ஆகாது என்றும் அது ஒரு சம அந்தஸ்துள்ள சுயாட்சி அரசாக, தனக்கேயுரிய வெளிவிவகார உரிமைகளைப் பெற்றதாக அமையவேண்டும் என்றும் இந்தியா அங்கீகரிப்பது அவசியம் என்பதை வலியுறுத்தவேண்டும்.
இந்தியாவிடம் ஈழத்தமிழர்களாக நாம் எதைக் கோரவேண்டும் என்பதில் எம்மைச் சார்ந்து எமது கட்சிகளின் தலைமைகள் சிந்திப்பது அவசியம்.
இந்தியா ஈழத் தமிழர்களுக்கான தனியான வெளியுறவை அங்கீகரிக்கும் வகையில் சில முக்கிய முடிவுகளை எடுக்கவேண்டிய தருணம் இது.
உள்ளகப் பொறிமுறைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு அரசியற் தீர்வுப் பொறிமுறையையே உடனடித் தீர்வாகவும், ஆரம்பப் புள்ளியாகவும் இந்தியா வலியுறுத்தவேண்டுமாறு தமிழர் தரப்புக் கோரவேண்டும். அப்போது மாத்திரமே, இங்கே பாதிக்கப்பட்ட தரப்புகளுக்கான சர்வதேச நீதிக்கான கதவுகள் திறக்கும். ஒருபோதும் இலங்கையின் ஒற்றையாட்சி சர்வதேச நீதிக்கான கதவுகளை திறக்க அனுமதிக்காது என்பதைப் புரிந்த நிலையில் தமிழர் தரப்புக் கட்சிகளின் முடிவுகள் அமையவேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.