பாடசாலை நேரத்தில் வெளியில் நிற்கும் மாணவர்கள் – தன்னிடம் கருத்து கேட்கவேண்டாம் எனக்கூறும் அதிபர்…!
தேசிய பாடசாலை திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ள, காரைநகரில் உள்ள பிரபல அரச பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவர்கள் பாடம் நடக்கும் நேரங்களில் பாடசாலைக்கு வெளியே நிற்கின்றனர் என ஊடகவியலாளர்களுக்கு கிடைத்த தகவலையடுத்து இன்றைய தினம் (21) ஊடகவியலாளர்கள் அங்கு சென்றிருந்தனர்.
பாடசாலை நடைபெறும் நேரம் சுமார் ஒரு மணித்தியாலத்திற்கும் அதிகமான நேரம் ஊடகவியலாளர்கள் அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பல மாணவர்கள் பாடசாலைக்கு வெளியே நின்றிருந்தனர். சிலர் கடைகளுக்கு செல்வதும் பாடசாலைக்கு உள்ளேயும் வெளியேயும் செல்வதுமாக செயற்பட்டுக்கொண்டிருந்தனர்.
இதனை அவதானித்த ஊடகவியலாளர்கள் பாடசாலையின் அதிபரைச் சந்தித்து, “பாடசாலை நடைபெறும் நேரத்தில் மாணவர்கள் எதற்காக வெளியே நிற்கின்றார்கள்?” என கேட்டபோது, அதற்கு அதிபர்,
“இது தொடர்பாக கருத்தினை கேட்பதற்கு மேலிடத்தில் அனுமதி வாங்கிவிட்டு வந்தீர்களா?” என கேட்டார். அதற்கு ஊடகவியலாளர்கள், “மாணவர்கள் வெளியில் நிற்பது தொடர்பாக அதிபரிடம் எடுத்துரைப்பதற்கு மேலிடத்தில் அனுமதி பெறவேண்டிய அவசியமில்லை” என கூறினர்.
அதற்கு மீண்டும் பதிலளித்த அதிபர், ” மாணவர்கள் வெளியில் நின்றால் அதை ஏன் என்னிடம் வந்து கேட்கின்றீர்கள், போய் மேலிடத்தில் அனுமதி பெற்றுவிட்டு வாருங்கள் எனக்கூறி ஆசிரியர்கள் சிலரை அழைத்து ஊடகவியலாளர்களை மிரட்டுவது போல் செயற்பட்டிருந்தார்.
தற்போது வீதி விபத்துக்களும், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களும் நாளாந்தம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய அதிபர் இவ்வாறு பொறுப்பற்ற விதத்தில் செயற்படுவது ஒரு ஆரோக்கியமான விடயமா?
அண்மையில் குறித்த அதிபர் மாணவன் ஒருவரை தாக்கி, அந்த மாணவனின் செவிப்பறை பாதிப்படையச் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.