நேற்றையதினம், வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு முள்ளியானில் மீன்பிடிக்க சென்று வீட்டிற்கு வந்த மீனவர் மீது சிவில் உடையில் வந்தவர்கள் கொடூர தாக்குதலை நடாத்தியுள்ளனர்.
குறித்த தாக்குதலை 5 பேர் கொண்ட கும்பல் மேற்கொண்டதாக பாதிக்கப்பட்ட மீனவரான ராஜ்குமார் (வயது 34) தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நான் மீன் பிடிப்பதற்கு கடலுக்கு சென்ற நேரம் சிவில் உடையில் வந்த ஐவர் அடங்கிய கும்பல் என்னை விசாரித்தனர். இதன்போது பயந்து நடுங்கிய எனது குடும்பஸ்தவர்கள் எனக்கு தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டு என்னை வீட்டிற்கு வருமாறு அழைத்தனர்.
தொலைபேசி அழைப்பினை தொடர்ந்து நானும் வீட்டிற்கு வந்தேன். அப்போது அங்கிருந்தவர்கள் எனது கை மற்றும் கால்களை கட்டி விட்டு அவர்கள் வந்த ஜீப்பிற்குள் என்னை ஏற்றிவிட்டு விக்கெட் மற்றும் கொட்டனால் என்னை தாக்கினர்.
இதனால் நான் மிகவும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளேன். நான் கஞ்சா கடத்தவுமில்லை அவர்கள் என்னிடமிருந்து கஞ்சாவை அவர்கள் மீட்கவுமில்லை என அவர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.