தலவாக்கலை பகுதியில் தனது மனைவியை பொல்லால் அடித்து கொடூரமாக கொலை செய்துவிட்டு 14 வருடங்களாக தலைமறைவாகியிருந்த சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தலவாக்கலை தபால் நிலையத்தில் பணிபுரிந்து வந்த குறித்த சந்தேகநபர், கடந்த 2007ஆம் ஆண்டு, தலவாக்கலை, வட்டகொடவத்த பிரதேசத்தில் தாம் வசித்து வந்த வீட்டில் வைத்து இக்கொலையை புரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குற்ற விசாரணைப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் 49 வயதான ஜெஸ்மின் ரஞ்சனி எனும் இரு பிள்ளைகளின் தாயே இவ்வாறு கொலை செய்யப்பட்டிருந்தார்.
குறித்த சம்பவத்தை தொடர்ந்து, குறித்த நபர் எம்பிலிபிட்டி, துங்கம பிரதேசத்திற்குச் தப்பிச் சென்று அங்கு வாழ்ந்து வந்துள்ளார்.
கடந்த 13 வருடங்களுக்கு மேலாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்த போதிலும் அவர் தொடர்பில் எவ்வித தகவலும் கிடைக்காத நிலையில், கொழும்பு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் விசாரணைகளை ஒப்படைக்குமாறு, நுவரெலியா நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
குறித்த சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில், நுவரெலியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.