தமிழர் விடுதலைப் போராட்ட இயக்கங்களை தலைமை தாங்கியவர்களுக்கும் குறிப்பாக தலைவர், அன்ரன் பாலசிங்கம் போன்றவர்களுக்கும் படிப்பறிவு இல்லை என சீண்டல் தனமாக சரத் பொன்சேகா உளறியுள்ளார் என வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
சரத் பொன்சேகா அரசியல் வங்குரோத்து அடைந்து விட்டார் என்பதையே இந்தக் கருத்து மிக ஆழமாக வெளிப்படுத்தியுள்ளது. கடந்த காலத்தில் பிரபாகரனின் காலில் உதிர்ந்து விழும் முடிக்கு கூட இங்கு எவருக்கும் தகுதி இல்லை என கூறிய வாய் இன்று மாறி அரசியல் வங்குரோத்தை அடைந்துள்ளது.
பிரபாகரன் பத்தாம் வகுப்பு வரை கல்வி கற்றவர் என்பது உலகறிந்த விடயம். அன்ரன் பாலசிங்கத்தை சிறந்த இராஜதந்திரியாக உலகமே ஏற்றுக் கொண்டதை அனைவரும் அறிவர்.
ஏனைய இயக்க தலைவர்களும் சிறந்த கல்விமான்கள் என்பதும் வரலாறு. உதாரணமாக ரெலோ தலைவர் சிறீ.சபாரத்தினம் முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியுடன் ஒன்றாக நண்பர்களாக லண்டன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றவர்.
விடுதலைப்புலிகள், ஈரோஸ், புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ் போன்ற இயக்கங்களில் ஆயிரக்கணக்கான பல்துறை சார் அறிவாளிகள் இருந்தனர்.
பிரபாகரன் மாபெரும் போராட்ட இயக்க தலைவராக வளர்ந்திருக்காவிட்டால் பொன்சேகா இராணுவத்தில் சப்பாத்து துடைக்கும் சிப்பாயாகத்தான் இருந்திருப்பார்.
இன்று தகுதிக்கு மிஞ்சிய பில்ட் மாஷல் கௌரவம் கிடைத்தது என்றால் தலைவர் பிரபாகரனால் பொன்சேகாவிற்கு கிடைத்த பிச்சை என்பதை பொன்சேகா மறந்து விட்டார்.
அத்துடன் ராஜபக்ஷக்கள் சிறையில் அடைத்து அரைக் காற்சட்டையுடன் மனித மலம் அள்ள விட்டத்தையும், வரிசையில் சாப்பாட்டிற்கு நின்றதையும் பீல்ட்மாஷல் கௌரவத்தை பறித்ததையும் மறந்து விட்டார் போல.
சிங்கள இனவாதிகள் யாராவது பொன்சேகா உட்பட அரசியல் திறமை இருந்தால் தமிழர் விடுதலைப் போராட்டத்தையும், பிரபாகரனின் பெயரை உச்சரிக்காமல் பதவிகளை பெற முடியுமா என்பதை எதிர்காலத்தில் நிரூபியுங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.