2024ஆம் ஆண்டு சர்வதேச அரசியலில் தொடர்ச்சியாக தேர்தல்கள், ஆட்சி மாற்றங்கள் மற்றும் ஆட்சி தொடர்கை தொடர்பிலான விவாதங்கள் முதன்மையான உரையாடலை பெற்று வருகின்றது. அதில் அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியிருந்தது. குறிப்பாக அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதியான ஜோ பைடன் தேர்தல் போட்டியிலிருந்து விலகியிருந்தார். இந்நிலையில் ஜனநாயக கட்சி சார்பில் களமிறங்கியிருந்த உபஜனாதிபதி கமலா ஹரிஸ் பிரதான போட்டியாளராக எதிர்பார்க்கப்பட்டிருந்தார். எதிர் முனையில் குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ரொனால்ட் ட்ரம்பின் கடந்த கால நடத்தைகள் மீது எதிரான விமர்சனங்கள் உருவாகியிருந்தது. அதிலும் தேர்தல் காலப் பகுதியில் ரொனால்ட் ட்ரம்ப் மீதான பாலியல் குற்றச்சாட்டை நீதிமன்றம் உறுதிப்படுத்தி கொண்டது. மேலும் ஜனாதிபதி வேட்பாளர்கள் பங்குபற்றும் நேரடியான விவாத களத்திலும் ரொனால்ட் ட்ரம்பின் கருத்துகள் விமர்சிக்கப்பட்டு, கமலா ஹரிஸ் முதன்மைப்படுத்தப்பட்டிருந்தார். மேற்கு ஊடகங்களும் அவ்வாறான பிரதிபலிப்பையே வெளிப்படுத்தியிருந்தது. எனினும் தேர்தல் முடிவுகள் முற்றிலும் முரணாக அமைந்துள்ளது. குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ரொனால்ட் ட்ரம்ப் பாரிய அளவில் வெற்றி பெற்றுள்ளார். இக்கட்டுரை அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முடிவுகள் வெளிப்படுத்தும் நடைமுறை அரசியலை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது. நான்கு ஆண்டு ஜனாதிபதி சுழற்சியில் அமெரிக்காவின் 60வது ஜனாதிபதி தேர்தல், நவம்பர்–05 (2024)அன்று நடைபெற்றது. குறித்த தேர்தல் முடிவுகளில் அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ரொனால்ட் ட்ரம்ப் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் 2016ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் 45வது அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருந்தார். எனினும் 2020ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடனிடம் தோற்றிருந்தார். மீள தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை எதிர்கொண்டு இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார். அமெரிக்க வரலாற்றில் ஒரே ஜனாதிபதி இரு வேறு பருவ காலங்களை குறிக்கும் வகையில் அடையாளப்படுவது இதுவே முதல்முறையாகும். முன்னைய ஜனாதிபதிகள் இரு பருவங்களை தொடர்ச்சியாக அனுபவித்துள்ளார்கள். தோல்விக்கு பின் மீள ஒரு தேர்தலை எதிர்கொண்டதில்லை. இவ்வரலாற்றிலிருந்து மாறுபட்டவராகவே அமெரிக்காவின் 45வது மற்றும் 47வது ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் காணப்படுகின்றார். அமெரிக்க ஜனாதிபதி, தேர்தல் கல்லூரி மூலமாகவே தெரிவு செய்யப்படுகின்றார். தேர்தல் கல்லூரி உறுப்பினர்கள் மக்களால் நேரடியாக வாக்களிக்கப்பட்டு தெரிவு செய்யப்படுகின்றார்கள். தேர்தல் கல்லூரி உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களின் எண்ணிக்கையை பிரதிபலிக்கிறது. 538 உறுப்பினர்கள் தேர்தல் கல்லூரிக்கு தெரிவு செய்யப்படுகின்றார்கள். மாநிலங்களின் சனத்தொகை விகிதாசாரத்திற்கேற்ப தேர்தல் கல்லூரி உறுப்பினர்கள் பங்கீடு செய்யப்படுகின்றனர். மாநிலங்களில், ‘எளிய பெரும்பான்மையில் வெற்றியாளர் அனைத்தையும் பெற்றுக்கொள்வார்’ எனும் விதிமுறையே பின்பற்றப்படுகின்றது. எடுத்துக்காட்டாக. டெக்சாஸ் மாநிலத்தில் 40 தேர்தல் கல்லூரி உறுப்பினர்கள் காணப்படுகின்றார்கள். ஜனாதிபதி தேர்தலில் டெக்சாஸ் மாநிலத்தில் குடியரசுக் கட்சி பெரும்பான்மை வாக்குகளை பெற்றிருப்பின், குறித்த 40 ஆசனங்களும் குடியரசுக்கட்சிக்கே ஒதுக்கப்படும். இவ்வாறான ஒழுங்கமைப்பில் 2024 ஜனாதிபதி தேர்தலில், அமெரிக்க தேர்தல் கல்லூரி உறுப்பினர்களுக்கான தெரிவில் குடியரசு கட்சி 312 ஆசனங்களையும், ஜனநாயகக் கட்சி 226 ஆசனங்களையுமே பெற்றிருந்தது. இதனடிப்படையில் குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ரொனால்ட் ட்ரம்பின் வெற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஜனாதிபதி ட்ரம்ப் 2025, ஜனவரி–20அன்று 47வது ஜனாதிபதியாக உத்தியோகபூர்வமாக பதவியேற்க உள்ளார். இரண்டரை நூற்றாண்டை அண்மித்த வரலாற்றை பகிரும் அமெரிக்காவின் அறுபதாவது ஜனாதிபதி தேர்தலும் அதன் முடிவுகளும் புதியதோர் அடையாளத்தை வெளிப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் மீது வலிந்து திணிக்கப்பட்டுள்ள ஜனநாயகத்தின் வரையறைகளை அல்லது எல்லைகளை கேள்விக்குட்படுத்துவதாக அமைகின்றது. அமெரிக்கத் தேர்தல்களின் நாஸ்ட்ராடாமஸ் என்று அழைக்கப்படும் அமெரிக்க வரலாற்றாசிரியர் ஆலன் லிக்ட்மேன், 2024ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹரிஸின் வெற்றியைப் பற்றிய அவரது கணிப்பு தவறாகப் போனதால், அமெரிக்காவின் ஜனநாயகத்தை கேள்விக்குட்படுத்தியுள்ளார். “ஜனநாயகம் விலைமதிப்பற்றது, ஆனால் எல்லா விலைமதிப்பற்ற பொருட்களைப் போலவே, அது அழிக்கப்படலாம். மற்றும் பொதுவாக உள்ளிருந்து அழிக்கப்படுகிறது. 21ஆம் நூற்றாண்டு, உலகம் முழுவதும் ஜனநாயகம் வீழ்ச்சியடைந்து வருகிறது. மேலும், அமெரிக்கா இப்போது படியில் விழுந்துள்ளது. ஆனால் ஒருபோதும் நம்பிக்கையை கைவிடாதீர்கள். முயற்சி செய்வதை ஒருபோதும் நிறுத்தாதீர்கள். குறிப்பாக இளைஞர்களே முயற்சி செய்வதை ஒருபோதும் நிறுத்தாதீர்கள்” என்று தேர்தல் முடிவுகள் பற்றிய நேரலை நிகழ்வொன்றில் லிச்ட்மேன் கூறியிருந்தார். ஜனநாயகம் பொதுவில் தேர்தல்களின் பெரும்பான்மையினூடாகவே அளவீடு செய்யப்படுகின்றது. அத்தகைய அளவீடுகளில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலும், ஜனநாயக ஒழுங்கினையே பிரதிபலித்துள்ளது. 50.2% வாக்குகளை பெற்றுள்ள குடியரசுக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரே ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். பெரும்பான்மை ஜனநாயகத்தை பூரணப்படுத்துமா என்பதே மறுசீரமைப்பு ஜனநாயகத்துக்கான தேவைப்பாட்டையும் அடையாளப்படுத்தப்படுகின்றது. ஜனநாயகத்தின் அளவீடும், உள்ளடக்கமும் நீண்டகாலமாக முரண்படும் காரணிகளாவே அமைகின்றது. ஜனநாயகம் என்பது மக்களாட்சி தத்துவம். அனைத்து மக்களையும் சமமாக உள்வாங்கி, அனைவரது அரசியல்–சமுக–பொருளாதார அபிலாசைகளையும் அங்கீகரிப்பதை குறித்து நிற்கின்றது. அதனடிப்படையிலேயே ஜனநாயகம் விலைமதிப்பறதாகவும் அடையாளப்படுத்தப்படுகின்றது. எனினும், நடைமுறையில் ஜனநாயகம் பெரும்பான்மையினால் அளவீடு செய்யப்படுவதனால், சிறுபான்மையினரின் கருத்துக்களை நிராகரிப்பதாகவும், சிறுபான்மையினரின் அரசியல்–சமுக–பொருளாதார அபிலாசைகளை தவிர்ப்பதாகவும் அமைகின்றது. 2024ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் முடிவு அதற்கான சான்றாகவே அமைகின்றது. ஒன்று, ஜனநாயகம் பற்றிய மெய்யான வாதங்களில் சிறுபான்மை–பெரும்பான்மை வாதங்கள் தவிர்க்கப்பட வேண்டியதாகும். ஆலன் லிக்ட்மேன் கமலா ஹரிஸின் வெற்றி வாய்ப்பு தொடர்பில் தேர்தலுக்கு முன்னைய எதிர்வு கூறலில், “ஆம், நாங்கள் கமலா ஹரிஸை எதிர்வு கூறுகிறோம். ஒரு புதிய பாதையை உடைக்கும் ஜனாதிபதி. முதல் பெண் ஜனாதிபதி மற்றும் கலப்பு ஆப்பிரிக்க மற்றும் ஆசிய வம்சாவளியைச் சேர்ந்த முதல் ஜனாதிபதியாக இருக்கப் போகிறார். இது அமெரிக்கா எங்கு செல்கிறது என்பதை முன்னறிவிப்பது போன்றது. நாம் விரைவாக பெரும்பான்மை சிறுபான்மை நாடாக மாறி வருகிறோம். என்னைப் போன்ற வயதான வெள்ளைக்காரர்கள்; நாங்கள் வீழ்ச்சியில் இருக்கிறோம்” எனத்தெரிவித்திருந்தார். லிக்ட்மேன் தனது கருத்தில், ‘அமெரிக்கா விரைவாக பெரும்பான்மை சிறுபான்மை நாடாக மாறி வருகின்றது’ என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். இதனை லிக்ட்மேன் ஆக்கபூர்வமான முன்னேற்றமாகவே வெளிப்படுத்தியுள்ளார். எனினும் இனவாத நோக்குனர்களிடையே இது ஆபத்தான சமிக்ஞையாக இலகுவாக பிரச்சாரம் செய்யக்கூடியதாகும். அதன் சாதகத்தன்மையையே ட்ரம்ப் பெற்றுள்ளார். வெள்ளை பயங்கரவாதம் விரைவான வளர்ச்சியை பெற்று வருகின்றது. குறிப்பாக 2019ஆம் ஆண்டு நியுஸிலாந்து பள்ளிவாசல் தாக்குதல் அதனையே உறுதி செய்தது. எனினும் மேற்கின் ஊடக ஆதிக்கம், பயங்கரவாதத்துக்கு இஸ்லாமிய சாயம் பூசுற அளவு, வெள்ளை பயங்கரவாத கருத்தையும் மூடி மறைத்து வந்துள்ளது. அதனை அமெரிக்க தேசியவாதமாக முன்னிறுத்தி பலனை பெற்றுக்கொண்டதில் ட்ரம்ப் முதன்மையானவராக உள்ளார். 2016ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ‘அமெரிக்கா அமெரிக்கர்களுக்கானது’ என்ற பிரச்சாரத்தையே முன்னிறுத்தினார். வெற்றி பெற்றிருந்தார். 2024ஆம் ஆண்டு தேர்தலில் மீள பிரதான எதிர் போட்டியாளர் கலப்பு ஆப்பிரிக்க மற்றும் ஆசிய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது, அமெரிக்க தேசியவாத அரசியல் பிரச்சாரத்திற்கு சாதகமாக அமைந்துள்ளது. அமெரிக்க பெரும்பான்மை சிறுபான்மை தலைமையை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதையே மீள உறுதி செய்துள்ளது. 2008-2016ஆம் ஆண்டுகளில் கறுப்பினத்தை சேர்ந்த பராக் ஒபாமா விதிவிலக்காக அமெரிக்க ஜனாதிபதியாகி இருந்தார். எனினும் அன்றைய அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடியை மறுசீரமைக்க ஒபாமா எனும் கருவி தேவைப்பட்டது, பயன்படுத்தி கொண்டார்கள் என்பதே நிதர்சனமாகும். மாறாக பெரும்பான்மை சிறுபான்மை எண்ணங்களுக்குள் சிந்திக்க தயாரில்லை. கறுப்பினத்தவரை ஜனாதிபதியாக ஏற்றிருந்த அமெரிக்காவிலேயே, 2020ஆம் ஆண்டு ஜார்ய் பிலய்ட் எனும் கறுப்பினத்தவர் பொதுவெளியில் வெள்ளையின காவல்துறையால் கழுத்து நெரித்துகொலை செய்யப்பட்டார். இரண்டு, அரசியல் ஆணாதிக்கம் நிறைந்தது என்பது நீண்டகால வாதம். பல அரசறிவியலாளர்களும் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்கள். அரசியல் இலக்கணம் (Grammar of Politics) எனும் நூலை எழுதிய சிந்தனையாளரான ஹெரோல் லஸ்கி (Harold Laski) உலக அரசியல் அமைப்புகள் அனைத்தும் ஆண் மேலாதிக்க அரசியல் அமைப்பு என்றே தெரிவித்துள்ளார். அமெரிக்கா அதற்கு விதிவிலக்கானது இல்லை. அமெரிக்கா அறிஞர்கள் பெண்ணியம் பற்றி பெரிய போதனைகளை முன்னிறுத்துகின்றனர். உலக நாடுகள் சிலவற்றில் ஏதோ சந்தர்ப்பத்தில் பெண் ஆட்சி தலைமைகள் உருவாகியும் வருகின்றது. எனினும் 200 ஆண்டு வரலாற்றை பகிரும் அமெரிக்காவினால் பெண் தலைமைத்துவத்தை ஏற்க முடியாத நிலைமைகளே காணப்படுகின்றது. அமெரிக்க வரலாற்றிலே ஒரு பெண் ஜனாதிபதி ஆவது என்பது, கடினமான இலக்கு என்பதை பல தடவை அமெரிக்கா வாக்காளர்களும் தேர்தல் கல்லூரியின் உறுப்பினர்களும் நிறுவியுள்ளனர். 1872 விக்ரேறியா வூட்ஹால்(Vigtoria Woodhull) 2016 ஹில்லாரி கிளின்டன்(Hillary Clinton), 2024 கமலா ஹரிஸ்(Kamala Harris) ஆகியோர் மட்டுமே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட பெண் ஜனாதிபதி வேட்பாளர்கள். மூவரும் தோற்றுள்ளனர். அமெரிக்கா ஜனநாயகம் வரையறைகளைக் கொண்டு இயங்குகிறது மட்டுமின்றி அது வழங்கும் உரிமையும் அங்கீகாரமும் வரையறைக்கு உட்பட்டது என்பதை பல சந்தர்ப்பங்களில் உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. அதனை கமலா ஹரிஸ்க்கு எதிரான வாக்குகளை கருத்தில் கொள்ளும்போது புரிந்து கொள்ள வேண்டிய நிலை காணப்படுகிறது. மூன்று, அமெரிக்காவின் ஜனநாயகம், ‘அமெரிக்காவின் நீதிமன்றால் பாலியல் குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டவரை அமெரிக்காவின் அரச தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளது.’ தாராளம், நல்லாட்சி பற்றி உலகிற்கு போதிக்கும் ஆட்சியாளன் பாலியல் குற்றவாளி என்பது, அமெரிக்காவின் ஜனநாயக வடிவத்தின் உண்மையான படிமங்களை தோலுரிக்கின்றது. ட்ரம்ப் மக்களாலும் தேர்தல் கல்லூரியினாலும் பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளார். பாலியல் குற்றச்சாட்டு பெரியவிவகாரமாக அமையவில்லை. எனவே அமெரிக்க வரலாறும் முழுவதும் பெண்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை வரையறுப்பதிலும் கட்டுப்படுத்துவதிலும் முதன்மையானவர்களாக உள்ளனர். இது அமெரிக்க ஆட்சியும் அதிகாரமும் அடையாளப்படுத்தும் ஜனநாயம் எதுவென்பதை வரையறுக்கிறது. இத்தகைய அமெரிக்க ஜனநாயகத்தின் வரையறைக்குள்ளேயே ஜப்பான் மீதான இரண்டு அணு குண்டுகளை அமெரிக்க ஜனநாயகம் வீசியது என்பதும் அதன் ஜனநாயகத்தை உலகம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை உணர்த்துகிறது. எனவே, 2024ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகள், அமெரிக்க விம்பத்தில் கட்டமைக்கப்பட்ட ஜனநாயக போலிகளை கட்டவிழ்ப்பதாக அமைந்துள்ளது. குறிப்பாக, பெரும்பான்மை என்பதற்குள் முடக்கப்படும் சிறுபான்மைக்கான அங்கிகாரமின்மை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், உலகிற்கு முற்போக்கு என்ற போர்வையில் தத்துவங்களை பிரேரிக்கும் அமெரிக்காவின் பிற்போக்கு தனம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பான்மை அளவீடு ஜனநாயகத்தை பூரணப்படுத்த போதுமானதாக அமையவில்லை என்ற கருத்தின் மேலாதிக்கமே, மறுசீரமைப்பு ஜனநாயகம் பற்றிய வாதங்களை உருவாக்கியது. அதில் ஒரு பகுதியாகவே வேட்பாளர்களின் நேரடி விவாதங்கள் ஊக்குவிக்கப்பட்டன. இது மக்களின் கருத்தை வேட்பாளர்கள் உள்வாங்கவும், வேட்பாளர்களை மக்கள் சரியாக அளவிடவும் பயனுடையதாக கருதப்பட்டது. அமெரிக்க அதனை தொடர்ச்சியாக செயற்படுத்தியும் வருகின்றது. எனினும் நடைமுறையில் தேர்தல் மற்றும் பெரும்பான்மை ஜனநாயகத்தை அச்சுறுத்தும் காரணிகள் என்பதையே அமெரிக்க தேர்தல் முடிவுகள் உறுதிசெய்துள்ளது. Read more »
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியில் மலர் அஞ்சலி செலுத்தி சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். முள்ளிவாய்க்காலில் உள்ள மாவீரர் துயிலும் இல்லம் மற்றும் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கு நேற்றையதினம்... Read more »
இலங்கை ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகள், இலங்கையின் ‘மாற்றம்’ என்ற சொல்லை பிரபலப்படுத்தியது. காரணம் ஜனாதிபதித்தேர்தலில் அனுரகுமார திசநாயக்கவின் தேர்தல் பிரச்சாரம் மாற்றம் என்ற வார்த்தையையே முதன்மைப்படுத்தியது. எனவே அவ்பிரச்சாரம் வெற்றி பெற்றுள்ளமையால், இலங்கையின் பொதுத்தேர்தல் பிரச்சாரங்களில் அனைத்து கட்சிகளும் மற்றும் சுயேட்சைக்குழுக்களும் மாற்றத்தை தமது... Read more »
இலங்கையில் ஜனாதிபதியாக இருப்பவர், பிரதமராக இருப்பவர் தமது நலன்களைப் பேணுபவராக இருக்க வேண்டும் என்று இந்தியாவோ அல்லது வேறு வல்லாதிக்க நாடுகளோ விரும்புவது வழமை. ஆனால், இப்போது பன்னாட்டு நிறுவனங்களும் தமது திட்டங்களை நிறைவேற்றுவதற்குத் தமக்குச் சேவகம் செய்யக்கூடியதாகப் பாராளுமன்றில் உறுப்பினர்கள் இருக்கவேண்டும் என்று... Read more »
விடுதலைப் புலிகளின் தியாகத்தில் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2009 ஆண்டின் பின்னர் தமிழ் மக்கள் சார்பில் நியாயமான அரசியல் தீர்மானங்களை எடுக்காது தமிழ்த் தேசிய அபிலாசைகளை பலவீனப்படுத்தி கூட்டுப் பாராளுமன்ற பிரதிநித்தித்துவத்தை சிதைத்து 2023 ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைத்து 2024... Read more »
நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் அரியனேந்திரன் அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் பலருக்கு எதிராக, இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழுவானது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் அதற்கு இலங்கை தமிழரசு கட்சியின் பிரித்தானிய கிளையின்... Read more »
தமிழகளின் ஒற்றுமையை சிதைக்கும் வகையில் செயற்பட்டுவரும் படித்த முட்டாள்களுக்கும் தமிழ்ப் பொதுவேட்பாளரை இழிவாகப் பேசி சிங்கள வேட்பாளர்களுடன் கூட்டு என்று கூறி அவரையும் நிராகரிக்க கோரும் பகிஸ்கரிப்பாளர்களுக்கும் தகுந்த பாடம் புகட்டும் வகையில் வரும் செப்டெம்பர் 21 ஆம் திகதி காலையிலேயே சென்று சங்கு... Read more »
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிப்பதென்ற தீர்மானம், கிளிநொச்சி மாவட்டக் கிளையில் நேற்றைய தினம் (30) நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சி – கிளிநொச்சி மாவட்டக் கிளையின் உபதலைவரும் வடக்கு மாகாண மேனாள் கல்வி அமைச்சருமான தம்பிராசா குருகுலராஜா தலைமையில் மாவட்டக் கிளை... Read more »
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளார் பா.அரியநேந்திரன் நேற்று ஞாயிற்றுக்கிழமை (18) மாலை 3 மணியளவில் முள்ளிவாய்க்காலில் பொதுச்சுடர் ஏற்றி ஜனாதிபதி தேர்த்தலுக்கான முதலாவது பிரச்சாரத்தினை ஆரம்பித்து வைத்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தமிழ் பொது வேட்பாளர்கள் தமது வெற்றிக்காக... Read more »
நடைபெற இருக்கின்ற ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சற்று முன்னர் உறுதிப்படுத்தாத செய்திகள் வெளியாகி உள்ளன. மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த அரியனேந்திரன். ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் பொதுச் சபை... Read more »